திருவண்ணாமலை :

 

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு போதிய வழிகாட்டிப்பலகைகள் இல்லாமல் சுற்றுலா பயணிகளும் வரலாற்று ஆர்வலர்களும் சிரமப்படுவதை தவிர்க்கும் விதமாக, க்யூ ஆர் கோட் (QR Code) வசதியுடன் கூடிய வழிகாட்டிப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாமண்டூர் குடைவரை வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையிலிருந்து சற்றே மேற்கு புறத்தில் உள்ளது. ஆனால் சாலையில் செல்பவர்களுக்கு அக்குடைவரை அங்குதான் உள்ளதா எனத்தெரியாது, இதுபோல சீயமங்கலம் குடைவரை செல்லும் வரை எந்த இடத்திலும் வழிகாட்டிப்பலகையும் தகவல் பலகையும் இல்லை.

இக்குறையை தீர்க்க சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் படி சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதியதாக வழிகாட்டிப்பலகைகள், தகவல்பலகைகள் தயார் செய்து 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த பலகைகள் :

மாமண்டூர் குடைவரை அருகே
வந்தவாசி – காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூர் கூட்டுரோடு
பிரம்மதேசம் – நாட்டேரி கூட்டுரோடு
மழையூர் கூட்டுரோடு
சீயமங்கலம்- திருமால்பாடி ரோடு
சீயமங்கலம் கோயில் அருகே
போளூர் – சேத்துப்பட்டு ரோடு பைபாஸ் ஜங்ஷன்

ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப் பலகைகளில் க்யூ ஆர் கோட் (QR Code) உள்ளது, அதை ஸ்கேன் செய்தால் திருவண்ணாமலை மாவட்ட வலைப்பக்க சுற்றுலா பகுதிக்கு செல்லும் படி அமைக்கப்பட்டுள்ளது என்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.