சென்ன‍ை: தமிழக தலைநகரில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு, 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும், 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கான பங்களா மட்டும், 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பங்களாக்களில், அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் முடிவையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 7ம் தேதி, ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிமையான விழாவில், முதல்வராக பதவியேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளது. எனவே, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், 10 நாட்களில் பங்களாக்களை காலி செய்ய பொதுப்பணித்துறை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்களின் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்களுக்கு, மொபைல் போன் வாயிலாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், சென்னைக்கு வந்து அறைகளை காலி செய்வதாக, அவர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கவுள்ளவர், கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர் என்பதால், அரசு பங்களாவை தொடர்ந்து பயன்படுத்தலாம்.