வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களில் பலர் கேரளாவை பூர்வீகமாகமாக கொண்டவர்கள் என்பது மிகையல்ல.

அனுபவம் மிக்க இந்த செவிலியர்களின் உதவியால் 73 லட்சம் தடுப்பூசிகளை கொண்டு 74 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டரில் பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் தடுப்பூசி வீணடி்கப்படுகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளியான நிலையில் இது அவர்களால் மட்டும் எப்படி சாத்தியமானது என்ற கேள்வி எழுகிறது.

பினராயி விஜயனின் டிவீட்டை தொடர்ந்து நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரங்கள் :

தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் மருந்துகள் இடத்திற்கு இடம் பல்வேறு அளவுகளில் அனுப்பிவைக்கப்படுகிறது.

கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்படும் மருந்து குடுவைகள் ஒவ்வொன்றிலும் 10 நபர்களு்கு தடுப்பூசி போட தேவையான 5 எம்.எல். குடுவைகளாக இருக்கின்றன.

பொதுவாக தடுப்பூசி மருந்துகளை குடுவைகளில் நிரப்பும் போது சற்று கூடுதலாக 5.8 முதல் 6.2 வரை அடைப்பது வழக்கம்.

ஊசி மூலம் மருந்தை எடுக்கும்போது ஏற்படும் காற்று வெற்றிடத்தை நீக்க வீணாகும் சில துளிகளை சமன் செய்ய இவ்வாறு சராசரியாக 20 விழுக்காடு மருந்து கூடுதலாக அடைக்கப்படுகிறது.

தடுப்பூசியின் அவசியத்தையும் தட்டுப்பாட்டையும் ஆரம்பம் முதலே உணர்ந்த கேரள சுகாதாரத்துறை இந்த தட்டுப்பாட்டையும் மருந்து வீணாவதையும் தடுக்கும் வழிகளை ஆலோசித்து மாநிலம் முழுதும் சில வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் காற்று வெற்றிடம் ஏற்படாமல் மருந்த ஊசியில் எடுப்பது குறித்தும், தேவையான அளவை மிகத்துள்ளியமாக எடுப்பது குறித்தும் மற்றும் குடுவையில் அடைக்கப்பட்ட கூடுதல் மருந்தை அதிகப்படியாக ஓரிருவருக்கு பயன்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை மூலம் செவிலியர்களுக்கு முறையான பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருந்துகளை எடுக்க பயன்படுத்தும் ஊசிகளில், சிரஞ்சிற்கும் ஊசிமுனைக்குமான இடைவெளியில் உள்ள சில துளி மருந்து வெளியேறாமல் அப்படியே ஊசிமுனையில் தங்கிவிடும் இதனை ‘டெட் ஸ்பேஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த டெட் ஸ்பேஸ் எனும் இடைவெளியை குறைக்க ஊசியின் நீளம் சிறிதாக உள்ள சிரஞ்சுகளை பயன்படுத்தி ஊசியில் இருந்து வெளியேறாமல் தங்கிவிடும் அளவை மேலும் குறைத்திருக்கின்றனர்.

இவை தவிர, தடுப்பூசி குடுவையை குளிர்பதன பெட்டியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் பயன்படுத்த தேவையான 10 முதல் 12 நபர்கள் வந்த பிறகே தடுப்பூசி போடுவது என்ற முடிவும், நடுக்கமின்றி மருந்தை வீணடிக்காமல் எடுக்கக்கூடிய கைதேர்ந்த செவிலியர்களால், குறைந்த அளவு மருந்து குடுவைகளை கொண்டு அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமாகியிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் .5 எம்.எல் அளவு மருந்து பயன்படுத்தப்பட்ட நிலையில் 5.8 எம்.எல் குடுவைகள் 11 பேருக்கும் 6.2 எம்.எல் குடுவைகள் 12 பேருக்குமாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால், 73,38,806 லட்சம் தடுப்பூசி குடுவைகளை கொண்டு 74,26,164 பேருக்கு அதாவது 43,679 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடக்கூடிய 87,358 டோஸ்கள் அதிகப்படியாக போடப்பட்டுள்ளது

அண்டை மாநிலமான தமிழகத்தில் தடுப்பூசி மருந்து இந்திய அளவில் அதிகப்படியாக வீணடிக்கப்பட்ட நிலையில் கேரளாவின் மருத்துவ நிர்வாக திறன் மற்றும் திட்டமிடல் காரணமாக உபரியாக பலருக்கு தடுப்பூசி போட்டிருப்பது பல்வேறு மாநிலங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.