சென்னை: பல தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணியில் பயணித்து வந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.

தமிழநாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி,  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தொகுதி பங்கீடுகள் முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இநத நிலையில்,  வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணியிடம் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த  பேசி வந்த நிலையில், அவர்கள் கேட்டது கிடைக்காத நிலையில்,  தனித்து போட்டியிட போவதாக  கிருஷ்ணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளளார்.

முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும், 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது,  கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ”உண்மையான அரசியல் வெற்றி” என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும்  என்றும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]