‘ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று புரி மடாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ‘பிரான் பிரதிஷ்டா’ என்ற பெயரில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது,

இந்த விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மடாதிபதிகள் அயோத்திக்கு வர உள்ளனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை உ.பி. அரசு பிரம்மாண்டமாக செய்து வருகிறது. இதற்காக அரசும் அதன் நிர்வாகவும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரிசா மாநிலம் ஜகன்னாதபுரி மடத்தின் சங்கராச்சாரியார் அயோத்தி செல்ல மறுத்துவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் நகரில் இன்று நடைபெற்ற ஒரு நீகழ்ச்சியில் கலந்து கொண்ட புரி சங்கராச்சாரியாரிடம் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் ஆடம்பர சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி சிலையைத் திறந்து வைத்து அதைத் தொட்டால், நான் அங்கு கைதட்டி ஆரவாரம் செய்யவேண்டுமா? எனது நிலைப்பாட்டிற்கும் வரம்புகள் உள்ளன.

ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும், இப்படிப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு நான் ஏன் செல்ல வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ராம் மந்திர் அறக்கட்டளையின் அழைப்பிதழ் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். இது குறித்து சங்கராச்சாரியார் கூறியதாவது, ‘எனக்கு கிடைத்த அழைப்பிதழில், சங்கராச்சாரியார் வர விரும்பினால், மேலும் ஒருவருடன் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

இதுதவிர இது வரை எங்களை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை, யார் வந்து அழைத்தாலும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு செல்லப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

1943ம் ஆண்டு பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் பிறந்தவரான பூரியில் உள்ள ஸ்ரீ கோவர்தன் பீடத்தின் 145வது ஜகத்குரு சங்கராச்சாரியார் நிச்சலானந்த் சரஸ்வதி, இந்து மதம் தற்போது சாஸ்திர சம்பிரதாயங்களை விட்டு ஆடம்பரங்களை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும். புதிதாக காட்டப்படும் கோயில்களும் அதை வடிவமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.