சென்னை:

பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்க முயன்ற், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கழகத்தைச் சேர்ந்தவர்கள் – காவல் துறையினர் என இரு தரப்பினரிடமும் பன்றிகள் மிகவும் நொந்துபோயின.

பன்றியை பிடிக்க தயாராக காவல்துறையினர்

தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 7 ஆவணி அவிட்டம்  அன்று பன்றிகளுக்கு பூணூல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

“இரண்டாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையான மக்களை சூத்திரர், இழி சாதி மக்கள் என புராண இதிகாசங்கள் மூலமாக  மூன்று சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் நிறுவி வருகிறார்கள். தான் மட்டுமே உயர் சாதி மற்றவர்கள் இழி சாதி என்றும் அதற்கு அடையாளமாக தாங்கல் மட்டும் பூணூல் அணிவதாகவும் நிறுவி வருகிறார்கள். மானமுள்ள திராவிடத் தமிழர்களான நாங்கள் இதை எதிர்க்கிறோம். எங்கள் கண்டனத்தை உணர்த்தும் விதமாக பார்ப்பனர்கள் பூணூல் அணியும் ஆவணி அவிட்டம் அன்று பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்துகிறோம்” என்று கோவை. ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இழுத்துச் செல்லப்படும் பன்றி

இந்த போராட்டத்தை சென்னை ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலை முன், நடத்த இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கட்சி அறிவித்திருந்தது.

காவல் வாகனத்தில் கட்டப்பட்டு கிடக்கும் பன்றி

ஆகவே இந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பன்றிகளை பிடிக்க நீளமான தூணிகளும் கொண்டு வந்து அதைப் பிடித்தபடி சில காவலர்கள் நின்றனர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் பன்றியை இழுத்து வந்தார்கள். அவர்களை சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு பன்றியையும் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி, கட்டிப்போட்டனர்.

மொத்தத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரிடமும், காவல்துறையினரிடமும் பன்றி பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

தங்களது போராட்டத்துக்கு, பாவப்பட்ட விலங்குகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.