டெல்லி:
ஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அமரிந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப்பின், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை அவரின் இல்லத்தில் நேற்று சந்தித்து நவ்ஜோத்சிங் சித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கத் சிங் கல்சியான், சுக்விந்தர் சிங் டானி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா செயல் தலைவராக நியமனம் செய்யபப்ட்டுள்ளார். நவ்ஜோத் சிங், 4 செயல் தலைவர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.