ஷார்ஜா: நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில், பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதில், கவனிக்க வேண்டியது என்னவெனில், பஞ்சாப் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி, 2ல் மட்டுமே வென்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணி வென்ற 2 போட்டிகளும் பெங்களூருக்கு எதிரானதே என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. இதற்கும், பெங்களூரு அணி சொத்தையான அணி என்று சொல்லிவிட முடியாது.
பஞ்சாப் அணியையும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் போன்றோர் தொடர்ந்து அதிரடி காட்டுகின்றனர். நிக்கோலஸ் பூரானும் நன்றாகவே செயல்படுகிறார். இதுவரையான போட்டிகளில், சதமடித்த இருவர், பஞ்சாப் அணியின் ராகுலும், அகர்வாலும் மட்டுமே.
மேலும், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், தற்போதைய நிலையில், பஞ்சாப் கேப்டன் ராகுலே முன்னணியில் இருக்கிறார். இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும், அந்த அணி, பெங்களூரை தவிர பிற அனைத்து அணிகளிடமும் தோற்றது என்பதுதான் விநோதம். 228 ரன்களை எடுத்தும்கூட, ராஜஸ்தானிடம் தோற்றது.
பெங்களூரு அணியுடனான தனது முதல் போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. நேற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, மொத்தம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது.
சில விளையாட்டுத் தொடர்களில் சில விநோதங்கள் நடைபெறும். அந்தவகையில், இதுவரையான போட்டிகளில், பஞ்சாப் அணி வென்ற ஒரே அணி பெங்களூரு மட்டுமே.