புதுடெல்லி: நீர் சேமிப்பு மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சட்லஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளை கால்வாய் மயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்.

மேலும், இதை ஒரு தேசிய திட்டமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

நதிகளை கால்வாய்மயப்படுத்துவதன் மூலம், ஆற்றுப்படுகைப் பகுதிகளை மேம்படுத்தி, பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தி மற்றும் அதன்மூலம் வேகமாக வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியுமென மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பிரதமர் மோடியிடம் அளித்த செயல்திட்ட முன்மொழிவில், மொத்தம் 945 கி.மீ. நீளமுள்ள ஆற்றங்கரைப் பகுதிகளில் பொருளாதார மண்டலங்களை அமைப்பது, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தற்போது மழைக்காலங்களில் பாகிஸ்தானுக்குள் பாய்ந்தோடும் ஆற்று நீரை சேமிக்க வேண்டிய தேவை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.