துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.

துருக்கியிலிருந்து ஆப்பிள், லிச்சி, பிளம்ஸ், செர்ரி மற்றும் உலர் பழங்களை புனே வர்த்தகர்கள் இறக்குமதி செய்து வந்தனர். இதில் ஆப்பிள் இறக்குமதி மட்டும் ₹1,200 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவான துருக்கியின் நிலைப்பாட்டை எதிர்த்து புனேவில் உள்ள பழ வியாபாரிகள் குழு ஒன்று துருக்கிய ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டனர். வேளாண் விளைபொருள் சந்தைக் குழு வர்த்தகர் சுயோக் ஜெண்டே மற்றும் பிற வர்த்தகர்கள் துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில், சுயோக் ஜெண்டே தொலைபேசிக்கு சில அழைப்புகள் வந்ததாகவும் ஆனால், அதை அவர் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனக்கு ஒரு குரல் பதிவு வந்ததாகவும் அது இந்தியாவை அவமதிப்பதாக இருந்ததாகவும் ஜெண்டே கூறியுள்ளார்.

மேலும், “நீங்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது துருக்கிக்கோ எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்று அதில் கூறியிருந்தது. “அந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக நான் ஒரு குரல் குறிப்பையும் அனுப்பினேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக புனே காவல் ஆணையரை சந்திக்க வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளதாக ஜெண்டே கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை சாலையில் எறிந்து போராட்டம் நடத்தினர்.