புதுக்கோட்டை :

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில்,  அங்கிருந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறும்படி போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி தெரிவித்துள்ளதால்  போராட்டத்தை கடுமையாக ஒடுக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளனவோ என்ற ஐயம் போராட்டக்காரர்களிடையே எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய பூமியில்,  ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை வளம் அழியும் என்றும் குறிப்பாக நீராதாரம் முற்றிலும் வற்றிப்போய் விவசாய பூமி பாலைவனமாகும் என்றும் கூறும்மக்கள், இத்திட்டத்தை எதிரத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 16ஆம் தேதி முதல் போராட்டம் நடந்து வரும் இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்களும் இளைஞர்களும் வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் போராட்டக்குழுவினர், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். “இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்காது. ஆகவே போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.

ஆனால் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால்  மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று கூறி தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுவாசலை அடுத்த புல்லான் விடுதியில் போராட்டக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்கிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள் இன்று நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் டிஆர்ஓ ராமசாமி, போராட்டக்காரர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்ட களத்தில் இருந்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் போராட்டத்தை தீவிர நடவடிக்கைகள் மூலம் மத்திய மாநில அரசுகள் ஒடுக்க தயாராகின்றனவோ என்ற அச்சம் போராட்டக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.