புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி  காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “சகோர சகோதரிகளே உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று தமிழில் பேசத் துவங்கினார்.

தொடர்ந்து, பேசிய அவர், “புதுச்சேரி மக்கள் விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக கருதும் குணம் உள்ளவர்கள். . புதுச்சேரிக்கு வந்த பிறகுதான் பாரதியார் தேசியக் கவியாக மாறினார். அவரை அன்போடு ஏற்று கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள். ஆங்கியேலேரிடம் இருந்து தப்பி வந்த அரவிந்த் கோஷுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் புதுச்சேரி மக்கள்” என்றார்.

மேலும், “’புதுச்சேரில் உள்ள ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறதா?  நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்தியாவை 48 ஆண்டுகள் ஒரு குடும்பம் ஆட்சி செய்திருக்கிறது. 48 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள் என்று அறிவு ஜீவிகள் யோசித்து பார்க்க வேண்டும்.  அதேபோல பத்து ஆண்டுகளாக அந்த குடும்பத்தின் ரிமோட் மூலம் ஆட்சி நடைபெற்றது.’ என்று மோடி பேசினார்.

’புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன’ என்று மோடி காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆரோவில் பொன்விழாவை தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டம்  நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஆரோவில் 50 வது உதயதினத்தையொட்டி ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை மற்றும் மாத்ரி மந்திர் அடங்கிய அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பொன்விழாவில் பேசிய பிரதமர் மோடி ’உலகின் ஒட்டுமொத்த மக்களையும் ஆரோவில் அமைப்பு ஒன்றிணைக்கிறது.  ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக ஆரோவில் சிறந்த சமூக, கலாச்சார, ஆன்மிக பணிகளை ஆற்றி வருகிறது.  பொருளாதாரத்தையும் ஆன்மீகத்தையும் தேடுபவர்களின் ஒருங்கிணைந்த இடமாக ஆரோவில் அமைந்திருக்கிறது” என்றார்.