மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை சார்பில் புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவை அரசு நீலப் புரட்சியில் கையெழுத்திட்டுள்ளது. 42 கி.மீ., கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

அந்த அளவுக்கு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும் பாசமும் கொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும், முட்டை அசைவமா? சைவமா? சர்ச்சை தொடர்கிறது. அதே போல் மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள்.

எனக்கு பிடித்த உணவு மீன். எனக்கு ஏற்றவரை சைவ உணவில் மீனை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.