புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலாமானார். அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் முன்னாள் சபாநாயகரும், எம்.பி.,யுமான கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக அங்குள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கண்ணனை புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இப்படியான நிலையில் முன்னாள் சபாநாயகர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் சபாநாயகர் கண்ணன். இவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர், எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2 முறை புதிய கட்சி தொடங்கிய கண்ணன், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவில் இணைந்தார். இதன்பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மணிப்பூர் சம்பவத்தை தொடர்ந்து பாஜகவுக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகினார். இந்த நிலையில் உடல்நலம் பாதிப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவு குறித்து, மகன் விக்னேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கடந்த நவம்பர் 1 ஆம் தேதி இரத்த அழுத்தம் குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை கண்ணன் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசிப்பசில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ப.கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசியலில் அளுமைமிக்கத் தலைவராக திகழ்ந்த கண்ணன் மறைவுச் செய்தி, ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. புதுச்சேரி மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அன்பைப் பெற்ற கண்ணன் சிறு வயதிலியே தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். அமைச்சர், சபாநாயகர், எம்.பி., பல்வேறு பதவிகளை வகித்தவர். அமைச்சராக இருந்த போது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வரவேற்பை பெற்றவர். தான் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர். புதுச்சேரி மக்கள் நலன், மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்பணித்த அவரது இழப்பு புதுச்சேரி அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பாத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.