புதுச்சேரி:

புதுச்சேரியில் , இன்று  மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அத்துடன் முதலவர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால்,  முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,  முதல்வர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சட்டப்பேரவை முழுமையாக மூடப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு நேற்றிரவி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை கரோனா முடிவு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முதல்வர் நாராயணசாமியை 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, அவர், எந்தவித அரசியல் நிகழ்ச்சிகளும் ஆய்வுகளிலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முதல்வர் நாராயணசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் முதல்வர் அலுவலகம், முதல்வர் வீடு அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் 42 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 690 ஆக உயர்ந்துள்ளது.