சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அக்டோபர் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரை, தியேட்டர் போன்ற ஒருசில பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
இந்த நிலையில், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், தொடர்ந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றம், மெரினா கடற்கரை, மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், சென்னையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு என்ன முடிவு செய்துள்ளது என்றும், கடற்கரையில் புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் மாதம் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என பதில் தெரிவித்துஉள்ளது.
மேலும்,
மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11க்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து, வசூலித்து வருகின்றனர். அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முக கவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தடையை மீறி கடற்கரைக்கு வருவோரிடம், ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.