சென்னை: தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன் நியமனத்தைத் தொடர்ந்து, துறை சார்ந்த அறிமுகக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை தீபாவளி பண்டிகை முடிந்ததும் வெளியிடப்படும் என்றார்.
மேலும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தங்களிடம் பேசியிருப்பதாக கூறிய அமைச்சர், அவர்களின் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பது, அவர்களு உணர்வுகளின் வெளிப்பாடு என்றவர், நீதிமன்றத்தில் இருந்து இன்னும் ஆசிரியர் பணியிடங்களை ஏன் நிரப்பாமல் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. அதற்கும் தீர்வு கண்டு வருகிறோம் என்றார்.
கடந்த 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் தங்களுக்கு பணி வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். மற்றொரு புறம், 2014, 2017, 2019, 2022ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பணிக்காக காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து வருகிறோம். இவர்களுக்கு பணி வழங்குவது மற்றும், அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல, மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா என்பதற்கான சில வழிமுறைளை ஆராயந்து, முதன்மை செயலாளரிடம் முன்வைத்துள்ளோம் என்றார். இதை முதலமைச்சர் அலுவலகம் வாயிலாக மாற்று ஏற்பாடுகளை சொல்ல இருக்கிறோம். அதற்கேற்ப முடிவெடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இந்த பிரச்சினைகளுக்கு இடையேதான், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.