சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில், பிளஸ்2 தேர்வு மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது, ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடி தேர்வுகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நேரடித்தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி உள்ளது. இன்று காலை 10மணிக்கு தேர்வுகள் தொடங்கிய நிலையில், தேர்வுகளை எழுத மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். இன்று மாநிலம் முழுவதும் 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வை எழுதி வருகின்றனர்.
தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுதேர்வு மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், மாணவர்கள் தைரியமாகத் தேர்வு எழுதுங்கள். பதற்ற பட வேண்டாம். மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஜூலை இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் எங்களின் பணி இருக்கும்” என்று தெரிவித்தார்.