தமிழகத்தில் அடுத்தடுத்து விசாரணைக் கைதி மரணங்கள்..

Must read

நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தமிழகத்தில் அடுத்தடுத்து விசாரணைக் கைதி மரணங்கள்..
போலீசாருக்கு எதிராக வேதனைக் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன..
போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நாம் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை மீண்டும் இங்கே நினைவு கூறுகிறோம்
“தங்களின் வலியை வெளி உலகத்துக்கு கொண்டு வந்ததாக விளிம்புநிலை மனிதர்களால் கொண்டாடப்படும் நடிகராகட்டும் இயக்குனராகட்டும், அடுத்த படத்தில் இன்னும் வருவாய் அதிகமாக தரக்கூடிய டாம்பீக அம்சங்களை முன்வைத்து படம் செய்து கொண்டிருப்பார்கள். அதனால் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து விட்டு அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயத்தைப் பற்றிப் பேசுவதுதான் சாலச்சிறந்தது..
ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலாகித்துப் பேசுகிறார். உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட தனிமனிதர் என்ற வகையில் ஸ்டாலினின் விமர்சனத்தை தாராளமாக ஏற்கலாம். ஆனால் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்ற கோணத்தில் யோசித்தால், அவர்கூட தனது பொறுப்பை யோசிக்காமல் நழுவி விடுகிறார் என்றே தோன்றுகிறது.
இத்தனைக்கும் ஜெய்பீம் படக்குழுவினரை பாராட்டி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மிசா காலத்தில் காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையையும் போலீசாரின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் தாக்குதலுக்கு ஆளாகி சிட்டிபாபு இறந்து போனதையும் குறிப்பிட்டுள்ளார். மனதை கனக்கச் செய்து விட்ட படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், காலம் காலமாக இருந்து வரும் காவல்துறையின் அடக்குமுறை மனப்பான்மையை மாற்ற, என்னுடைய காலத்தில் செயல் திட்டங்கள் கொண்டு வந்து முடிவு கட்டுவேன் என்று சொல்லியிருக்கலாம்.
குற்றம்செய்து கையும் களவுமாக பிடிபடுபவர்களையும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விசாரிக்கப்பட வேண்டியவர்களையும், நடத்தப்பட வேண்டிய விதத்தில் உள்ள வேற்றுமையை போலீசாருக்கு போதிப்போம் என்றும் முதலமைச்சர் சொல்லியிருக்கலாம். ஏனோ அவர் அந்த அளவுக்கு விரிவாக போகவில்லை. ஜெய் பீம் படம் பேசும், காவல்துறை அடக்குமுறை விசயத்திற்கு செல்வோம்.
எல்லாவற்றுக்கும் முதற்காரணம், காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டற்ற அதிகாரம். அவர்களின் பணி மிக மிக கடுமையானது என்றாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் பல மடங்கு அதிகமானது. நினைத்தால் ஒரு தனி மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு எந்த துறைக்கும் இவ்வளவு அதிகாரங்கள் கிடையாது.
ரோட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனை ஏறுடா வண்டியில் என்று போலீஸ் சொன்னால் ஏறித்தான் ஆகவேண்டும். எதற்காக நான் வரவேண்டும் என்று கேட்டால், “உன்னிடம் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் பேசிக்கொள்” என்று சொல்வார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போன பிறகு, பேசவே விடமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.
“போலீஸ் மேலேயே”, “போலீஸ்காரன்கிட்டயேவா?” இந்த வார்த்தைகள் சினிமாக்களில் ஹீரோ பேசும்போது ரசிகர்கள் மத்தியில் விசில் பறக்கிறது. ஆனால் அதிகார துஷ்பிரயோகத்தின் ஊற்றே இங்கிருந்துதான் துவங்குகின்றன என்பது பலருக்கும் புரிவதில்லை.
காக்கி சீருடை என்பது அரசின் அடையாளம். அதற்காக அது என்ன செய்தாலும் அனுமதித்துவிட முடியுமா?
நடுரோட்டில் நடுரோட்டில் ஒரு பெண்ணிடம் அருவருக்கத்தக்க செயலை செய்கிறார்கள் இருவர். அதில் ஒருவர் சாதாரண இளைஞர் என்றால் அவரைப் பிடித்து அங்கேயே வெளுக்கலாம்.. பொதுமக்கள் தர்ம அடி என புகழாரம் செய்யப்படும்.
இன்னொருவர் சீருடை அணிந்த காவலர் என்றால் அவரை தொடவெல்லாம்முடியாது..
“ஆயிரம் இருந்தாலும் போலீஸ் மேல் எப்படி நீ கைய வைக்கலாம்?” என்ற ஒரே கேள்வி எல்லாவற்றையும் போட்டு நொறுக்கிவிடும்.
“ஆயிரம் இருந்தாலும் போலீஸ்”.. அதாவது, இது அரசாங்கத்தின் மீதான தாக்குதலாம்.
ஆனால் இதே “ஆயிரம் இருந்தாலும் போலீஸ்” தான் சீருடை அணிந்தபடியே லஞ்சம் வாங்குகிறது. அங்கே அரசாங்கத்தின் அடையாளம் அவ்வளவு அவமானப்படுகிறது என்பதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை. மாமூல், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாமல் ஆயுதப்படைக்கோ கன்ட்ரோல் ரூமுக்கோ மாற்றிவிடுவார்கள். ஆனால் மற்ற எந்த துறையை சேர்ந்தவர்கள் லஞ்சம் வாங்கி பிடிபட்டாலும் உடனே கைது.. ரிமாண்ட்..
ஒரு காவல் நிலையத்தில் பெண் காவலரிடம் ஆண் காவலர் அத்துமீறி நடந்து கொள்வதாக புகார் எழுந்தால் உடனே அந்த ஆண் காவலர் டிரான்ஸ்பர்அல்லது காத்திருப்போர் பட்டியலுக்கு. இதே இன்னொரு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் சக ஆண் ஊழியர் அத்துமீறியதாக புகார் எழுந்தால் உடனே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது.
முதல் சம்பவத்தில் குற்றத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள். காவல்துறையை தாண்டி, மற்றவர்கள் என்றால், சட்டப்படி என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுகிறார்கள்.
பொது மக்களில் யாராவது கிரிமினல் குற்ற புகாருக்கு ஆளானால் சொல்ல வேண்டியதே இல்லை. நடு ரோட்டிலேயே அடித்து உதைத்துகூட இழுத்துச் செல்லப்படலாம்.
பாதுகாப்பு பணியின் போது காரில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாய் ஒரு டிஜிபிமீது ஒரு பெண் எஸ்பி புகார் தெரிவித்தார். சாமானியனுக்கு எதிரான புகார் என்றால் என்ன நடவடிக்கைகள் எந்தெந்த கோணத்தில் பாயுமோ அப்படி எல்லாம், இந்த விவகாரத்தில் நடந்ததா என்று யோசித்துப் பாருங்கள்.. மற்றவர்கள் மீதான உடனடி சட்ட நடவடிக்கைகள் போல் தவறு செய்யும் போலீசார் மீதும் பாரபட்சமில்லாமல் உடனடி சட்ட நடவடிக்கை என்ற நிலை என்றைக்கு வருகிறதோ அப்போதுதான் இதெல்லாம் மாற வாய்ப்பு.
இன்னொரு பக்கம் காவல்துறையினரை பற்றியும் அவர்கள் பக்கமிருந்து பார்த்தாக வேண்டும். மற்ற துறையினரை போல் காவல் துறையில் உள்ளவர்கள் உரிய மரியாதையுடன்.. வேண்டாம் சாதாரண மரியாதையுடனாவது நடத்தப்படுகிறார்களா என்றால் கிடையாது. இன்னமும் கீழ்மட்ட காவலர்களை பெயருக்கு பதிலாக நம்பர்களை சொல்லித்தான் 403, 378 என ஏதோ உயிரற்ற ஜடத்தைப்போல் அழைக்கிறார்கள். எந்த காலத்தில் வாழ்கிறோம் என்று தெரியவில்லை?
தேவையே இல்லாமல் பொய் வழக்கு போடுகிறார்கள், தேவையே இல்லாமல் பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள்.. இது போன்ற புகார்கள் எழுவதன் பின்னணியை யோசித்துப் பார்க்க வேண்டும்..
குற்றம் நடந்தால் போலீசார் அதனை வழக்கு பதிவு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இத்தனை வழக்குகளை பதிவு செய்தாக வேண்டுமென்று நிர்ணயிப்பது என்ன மாதிரியான நிர்வாக உத்தரவு? இத்தனை குற்றச் சம்பவங்கள் நடந்தே தீரும் என்று முன்கூட்டியே தீர்மானிப்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது? இதனால்தானே போலீசார் சுதந்திரமாக நிதானமாக செயல்பட முடியாமல் கேஸ்களுக்காக ஆட்களை வலியப்போய் பிடிக்கும் நெருக்கடி உருவாகிறது.
மற்றவர்களை காட்டிலும் கடுமையான பணிச்சூழலில் இருபத்தி நான்கு மணி நேரமும் உடல் உழைப்போடு உலவும் போலீசாருக்கு, ஓய்வு மற்றும் விடுமுறை போன்றவை உரிய நேரத்தில் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறதா? ஒரு சாமானியனின் பார்வையில் மற்ற துறையின் அலுவலகங்கள் போல் எளிதாக புழங்கும் இடமாக காவல் துறை சார்ந்த இடங்கள் இருப்பதில்லை. எதையாவது கேட்டு போனால் நம்மையும் உள்ளே உட்கார வைத்து விடுவார்களோ என்ற பயம் சாமான்யனிடம் இருக்கவே செய்கிறது.
பொதுவெளியில் ஒரு மாவட்ட ஆட்சியரிடம் அவ்வளவு ஏன் துறையின் செயலாளர் வந்தால்கூட பொதுஜனம் தைரியமாக அவர்களிடம் பயமே இல்லாமல் பேச முடிகிறது. காரணம் அவர்கள் அடிக்க மாட்டார்கள். ஆனால் இதே பொதுவெளியில் ஒரு கான்ஸ்டபிளிடம் கைநீட்டி கூட பேசி விட முடியாது. கொஞ்சம் பேசினால் அடுத்த வினாடியே, “வா என்னோடு”, ” வண்டியில ஏறு”, என்று சொல்லி இழுத்துக்கொண்டு போய்விடுவாரோ என பயம்.
காவல்துறையின் சித்திரவதை, கொடுமை அவமானப்படுத்துதல் போன்ற விஷயங்கள் எந்த இடத்தில் நடந்தாலும் அது அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-க்கு எதிரானது.
ஒருவரை போலீஸார் கைது செய்த உடன் அவருக்கு உண்டான உரிமைகளை அவர் இழக்கிறாரா என்ன ? அடிப்படை உரிமைகள் பறிபோய்விடுமா என்ன?
உச்சநீதிமன்றம் உள்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் இந்தக் கேள்விகளை பல தடவை பல வழக்குகளில் கேட்டுள்ளன.
160 ஆண்டுகளுக்கு முந்தைய போலீஸ் சட்டங்களை கையில் வைத்துக் கொண்டு, இன்னமும் அவற்றை சீர்திருத்தம் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது யார் குற்றம்?”

More articles

Latest article