சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கடற்படையில், முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பண பூஜை மற்றும் பிண்டம் பூஜைக்கான கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்புக்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு எழுப்பியதுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துஉ வோம் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரிகார பூஜைக்கான கட்டணச்சீட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபலமான ராமேஸ் வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், தங்களது முன்னோா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, அங்குள்ள அக்னி தீா்த்தக் கரையில் புரோகிதா்கள் மூலம் திதி, தா்ப்பணம், பிண்ட பூஜை செய்து நீராடி, ஈஸ்வரனை தரிசித்து ஆசி பெற்று செல்வர். இதற்காக அமாவாசை தினம் உள்பட முக்கிய தினங்களில் நாடு முழுவதும் இருந்து லட்சணக்கானோர் ராமேஸ்வரம் குவிவர். இந்த சமயத்தில், புரோகிதர்கள் உதவியுடன் தர்ப்பணம் கடமைகளை செய்யும்,, பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப புரோகிதா்களுக்கு தட்சிணையாகக் கொடுப்பது வழக்கம்.
ஆனால் இந்த நடைமுறைக்கு கட்டணம் நிா்ணயித்து இந்து சமய அறநிலையத் துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தர்ப்பணம், பிண்ட பூஜைக்கு கட்டணமாக தலா ரூ. 200, 400 வசூலித்து புரோகிதர்களுக்கு கூலியாக ரூ.80, 160 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரம்பரியமான இந்த நடைமுறைக்கு வேட்டுவைக்கும் விதமாக கோயில் நிர்வாகம் நேரடியாக பக்தர்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படத்தியது. சமூக வலைதளங்களிலும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. காலம் காலமாக பூஜை செய்யும் புரோகிதர்களை வெளியேற்ற கோயில் நிர்வாகம் அடாவடியாக செயல்படுகிறது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடிப பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரிகார பூஜைக்கான கட்டணச்சீட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.