தடைசெய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டு செயலியை உருவாக்கிய க்ராஃப்டான் (Krafton Inc) நிறுவனம் இப்போது ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள ‘பிரண்ட்’ (FRND) டேட்டிங் செயலி நிறுவனத்தில் சுமார் ரூ. 40 கோடி முதலீடு செய்துள்ளது.
தனக்கேற்ற ஜோடியை தனிமையில் சந்தித்து சகல பொருத்தமும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கும் மேற்கத்திய சம்பிரதாயமான டேட்டிங்-கிற்கு பயன்படும் இந்த பிரண்ட் செயலி இந்தியாவில் 10 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பலர் தற்போது நாளொன்றுக்கு சுமார் 25 நிமிடங்கள் இந்த செயலியில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பானு பிரதாப் சிங் தன்வர், ஹர்திக் பன்சல் மற்றும் ஹர்ஷ்வர்தன் சங்காணி ஆகிய மூன்று முன்னாள் ஐஐடி கான்பூர் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிரண்ட் செயலி நிறுவனத்தில் க்ராஃப்டான் (Krafton Inc) தவிர இந்தியா க்கோஸண்ட் (India Quotient) மற்றும் எலிவேஷன் கேப்பிடல் (Elevation Capital) ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கிறது.
மேலும் பல இந்திய மொழிகளில் இந்த செயலியை உருவாக்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக 50 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்திருக்கும் இந்த நிறுவனம், அதில் 38 கோடி ரூபாயை தென் கொரிய நிறுவனமான க்ராஃப்டானிடம் இருந்து பெற்றிருக்கிறது.
“தரவு பாதுகாப்புடன் இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்தில் உள்ளவர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியைப் போல் வேறு எந்த அந்நிய நிறுவனங்களாலும் உருவாக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்” என்று அதன் செயல் அதிகாரி தன்வர் கூறியுள்ளார்.