கவராட்டி:  லட்சத்தீவில் கல்வி நிறுவனங்களின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம் செய்து அம்மாநில நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வார விடுமுறை வெள்ளிக்கிழமை இருந்து வந்த நிலையில், அதை மாற்றி இருப்பதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் உள்பட பல நாடுகளில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த லட்சத்தீவில், பல ஆண்டுகளாக வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதை தற்போது மாற்றம் செய்து மாநில நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி, லட்சத்தீவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில்,  இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி லட்சத்தீவுகளில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாட்கள் என்றும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இனி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான  அறிவிக்கும் புதிய நாள் காட்டியை லட்சத்தீவு கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் உள்ள தீவுதான் லட்சத்தீவு. அமைதியான, அழகான இந்தத் தீவில் பெரும்பாலும் மலையாளிகள்தான் வசித்து வருகின்றனர். தமிழர்களும் உண்டு. பழங்குடி பூர்வகுடிகள் நிறைந்த தீவு இது. தற்போது இஸ்லாமியர்கள்தான் அதிகம் வசித்து வருகின்றனர். இந்தத் தீவின் பொறுப்பாளர்களாக  ஐஏஎஸ் அதிகாரிகளே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மத்தியஅரசு, பிரபுல் கோடா படேல் என்ற  அதிகாரியை இந்த தீவின் நிர்வாகியாக நியமித்தது. இவர் வந்தது முதலே லட்சத்தீவில் பெரும் பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை படேல் போட ஆரம்பித்தார். அதில் முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது கொரோனா கட்டுப்பாடுகளில் நடந்த குளறுபடிகள் காரணமாக சுமார்  20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டது. மாட்டிறைச்சிக்குத் தடை  விதிக்கப்பட்டதுடன், மது பானங்களின் வாசனையே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் மது பான விற்பனைக்கு படேல் அனுமதி அளித்தார். இதனால், லட்சத்தீவு மக்கள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள். போராட்டங்களும் வெடித்தன. கேரளா உள்பட பல மாநிலங்களும் லட்சத்தீவு மக்களுக்காக குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக அங்கு வார விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதால் வெள்ளி, சனி அங்கு வார விடுமுறையாக இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும். ஆனால் அதை தற்போது ஞாயிறு என்று மாற்றி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முடிவை திரும்பப் பெறுமாறு லட்சத்தீவு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பிபி அப்பாஸ், நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள், பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அதில் கேட்டுள்ளார். விடுமுறை மாற்றத்தால் லட்சத்தீவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.