பெங்களூரு: பணத்துக்காக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் பல கும்பல்கள் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரே குழந்தையை திருடும் பணியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்ப்ட்டுள்ளது.
பெண் மனநல மருத்துவர் ஒருவர் பெங்களூரில் ஒரு குழந்தையை திருடி ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் வெளியாகி உள்ளது. மருத்துவரே குழந்தையை திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் டாக்டர் ரஷ்மி சசிகுமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதிக்கு ரூ. 15 லட்சத்திற்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், மருத்துவர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக ஏமாற்றி, குழந்தையை திருடி விற்பனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், மருத்துவர் ரஷ்மி தெற்கு பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆலோசனை மருத்துவர் பணியில் இருப்பதுபோல தன்னை கூறிக்கொண்டு, ஒரு பெண் பிரசிவித்த ஒரு ஆண் குழந்தையை, அன்றே திருடி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர் ரஷ்மி இதுபோல மேலும் பல குழந்தைகளை திருடி விற்றாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.