சென்னை:

குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து போராட்டம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால்,  சென்னை பல்கலைக்கழகத்துக்கு இன்றுமுதல் 6 நாள் விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 23ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழக போராட்டம், வன்முறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பல்கலைக்கழக வளாகத்திற் குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவு முழுக்க மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய நிலையில் இன்று காலையிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றுமுதல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பல்கலைக் கழகத்துக்கு இன்று முதல் முதல் 23-ம் தேதி வரை 6 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 23 வரை நடைபெறவிருந்த வகுப்புகள், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.