காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைத்தே தீருவோம் என தமிழகஅரசு பிடிவாதமாக உள்ள நிலையில், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்கள், இன்றுகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றுவருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. வாலாஜாபாத் ஒன்றியம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், நிலம் கையகப்படுத்துதலபணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிராமக்களின் 146-வது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கிராம மக்கள் பேரணியாக செல்ல தொடங்கினர்.
13 கிராம மக்கள் இந்த பேணியில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாரும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிக்காக 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்களை தடுத்தி நிறுத்தி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்படி கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.