சென்னையில் துவங்கப்பட்ட முதல் படப்பிடிப்பு அரங்கங்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டுடியோ இனி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வாடகைக்கு விடப்படுகிறது.

மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் சென்று படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வந்த காலத்தில் தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பு அரங்கை நிர்மாணித்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம்.

தற்போது பேன்-இந்தியா படங்கள் என்ற பெயரில் தமிழகத்து முன்னணி நடிகர்கள் இந்தி, தெலுங்கு பேசி நடிப்பதும் கன்னட நடிகர்கள் கர்நாடகா முதல் கனடா வரை கொடிகட்டி பறப்பதும் அதிகரித்து வருகிறது.

இதற்கு ஏற்றாற்போல் சர்வதேச நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்திய படங்களை தயாரிக்க களத்தில் குதித்திருப்பதோடு எந்த ஊரில் எந்த நாட்டில் எந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படுகிறது என்பதே தெரியாத அளவுக்கு படப்பிப்புகள் நடந்து வருகிறது.

இதற்கான செலவுகள் குறித்தும் இந்த நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை, ஏனென்றால், இந்திய சந்தை அப்படி என்பதை திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் நன்கு புரிந்து வைத்துள்ளது.

ஏ.வி.எம்., விஜயா-வாஹினி, விக்ரம், ஏ.கே. வேலன், வாசு, பிரசாத், அருணாச்சலம், பரணி, ஷியாம் பிரசாத், தேவர், கோல்டன், கற்பகம் என்று இப்போதுள்ள நூறடி சாலை சந்திப்பு முதல் விருகம்பாக்கம் மார்க்கெட் வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் நீள ஆற்காடு சாலையின் இருபுறமும் இந்த அத்தனை ஸ்டுடியோக்களும் இயங்கிவந்த நிலையில் தற்போது ஏ.வி.எம். உள்ளிட்ட ஒன்றிரண்டு ஸ்டுடியோ-க்கள் மட்டுமே இன்றளவும் இயங்கி வருகிறது,

பன்னாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் தவிர திரைப்படங்களில் வரும் சிறிய குறியீடுகளும், திரைத்துறையில் அரசியல் தலையீடும் தமிழ் மட்டுமன்றி இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய திரைப்படங்களுக்கும் பெரும் தடையாக உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு அரங்குகளாக இருந்த ஸ்டுடியோ படப்பிடிப்பு தளங்களாக சுருங்கிப் போனதோடு தமிழ் படம் என்றால் தமிழ்நாட்டில் எடுக்கக் கூடாது என்ற நிலை உருவாவதை அடுத்து சென்னையில் உள்ள ஒன்றிரண்டு படப்பிடிப்பு தளங்களும் வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ-க்கள் தவிர திரைத்துறை சார்ந்த டப்பிங் தியேட்டர்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள், போஸ்டர்கள் அச்சடிக்கும் லித்தோ ப்ரெஸ்கள், கட்-அவுட்டுகள் வரையும் ஓவிய கூடங்கள் என்று கலைகட்டி நின்ற நிலையில் இப்போது மற்ற துறைகளை ஒப்பிடும் போது கோடம்பாக்கத்தில் களையெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக திரைத்துறை மாறி வருகிறது என்பது வேதனையளிப்பதாக உள்ளது.