சென்னை: தமிழ்நாட்டில் எழும்பூர் உள்பட 5ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார் என மக்களவை யில் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலளித்து உள்ளது. அதில், “நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதன்படி, சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை உள்பட 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 5 ரயில்நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் உள்ள 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 5 ரயில் நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 9 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு நிகராக மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வேயில் கூடுதலாக 38 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்வது குறித்து அடுத்த கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை எழும்பூர், காட்பாடி , மதுரை , ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி என தமிழகத்தின் 5 ரயில் நிலையங்களும், கேரளாவின் எர்ணாகுளம் டவுன், எர்ணாகுளம் ஜங்ஷன் மற்றும் கொல்லம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையமும் என ஒன்பது ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்ய கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
இதில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி தவிர அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூருக்கு டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை உள்பட 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.