மதுரை: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் எஸ்டேட் நிறுவனம்  நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

பல தலைமுறைகளாக அங்கு வசித்து வந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிரளை,  மாஞ்சோலையில் பணியாற்றி வந்த தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு  வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களை சுருக்கமாக மாஞ்சோலை எஸ்டேட் என்று அழைக்கிறார்கள். 1919ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை, சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனம் (BBTC) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றிருந்தது.

அந்த இடத்தில் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட்டது. இந்த எஸ்டேட் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ‘கங்காணிகள்’ எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வந்து ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 அதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்து, கீழே அனுப்பும் பணிகளை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு வழங்கி வருகிறது. இதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்போது வீடுகளை காலிசெய்ய சொல்லியும் பிபிடிசி நிறுவனம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் அரசே தேயிலை தோட்டங்களை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்களை  எழுந்துள்ளன.  மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், தொழிலாளர்களின் நலன் சார்ந்து அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான அப்பாவு கூறினார்.

அதுபோல கேரள வனப் பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்துள்ளதால், மாஞ்சோலையில் தொழிலாளர்கள் இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்றும், . மாஞ்சோலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக, தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.