சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியிடப்படும் என அரசு தேர்வுதுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பான பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 6ந்தேதி வெளியாகின. முன்னதாக பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை  நடைபெற்று முடிந்தன. இந்த தேர்வை  சுமார்  7.72 லட்சம் மாணாக்கர்கள் எழுதிய நிலையில்,   7,19,196 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வில் தேர்ச்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதிகளை தேர்வுதுறை வெளியிட்டது. அதன்படி,  மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், துணை தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி துணைத்தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஹால் டிக்கெட் இன்று மாலை இணையதளத்தில் வெளியாகும் என தேர்வு துறை அறிவித்து உள்ளது.

அதன்படி,  12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள்,  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,  பிளஸ் 2 துணைத்‌ தேர்வு எழுத விண்ணப்பித்த‌ தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை இன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என்றும், செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.