சென்னை
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ள நிகழ்வுகளின் விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் சீன நாடுகளிடையே ஏற்கனவே நடந்த இரு தரப்பு பேச்சு வார்த்தையின் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ராணுவப் பயிற்சி காரணமாக இந்த சந்திப்பை உறுதி செய்ய சீனா தயங்கி வந்தது. ஆனால் இந்திய ராணுவம் இந்தப் பயிற்சி பல நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது என விளக்கமளித்தது.
தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த சந்திப்பு நிகழும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் மாலை ஐந்து மணிக்கு அர்ஜுனன் தபசு, பாண்டவர் ரதங்கள், கடற்கரைக் கோவில் ஆகிய இடங்களை இணைந்து பார்வை இடுகின்றனர். அதன் பிறகு கோவில் அருகில் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளை இருவரும் கண்டு களிக்கின்றனர்.
அதன் பிறகு ஜி ஜின்பிங் க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார். சுமார் 75 நிமிடங்கள் நடைபெறும் இந்த விருந்தில் மோடியும் ஜி ஜின்பிங் மட்டும் கலந்துக் கொள்கின்றனர். ஆயினும் ஒரு சில மூத்த அதிகாரிகளும் இவர்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சீன அதிபர் தான் தங்கி உள்ள சென்னை விடுதிக்கு திரும்பிச் செல்கிறார்.
வங்கக் கடலோரம் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதியில் காலை 10 மணிக்கு இரு தலைவர்களும் சந்தித்து உரையாடுகின்றனர். இந்த உரையாடல் சுமார் 40 நிமிடங்களுக்குத் தொடர உள்ளது. அதன் பிறகு இதே இடத்தில் அதிகார மட்ட இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெற உள்ளன.
அதன் பிறகு அதே விடுதியில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் மீண்டும் சந்தித்து மதிய உணவு உட்கொள்கின்றனர். உணவு உட்கொண்ட பிறகு சீன அதிபர் விமான நிலையத்துக்குக் கிளம்பிச் செல்கிறார்.