சென்னை: அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான ஆணையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா ஓய்வு பெற்ற நிலையில், புதிய துணைவேந்தருக்கான தேர்வு நடைபெற்று வந்தது. தமிழகஅரசு சார்பிலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கவர்னர் சார்பில் அமைக்கப்பட்ட  தேடல் புதிய துணைவேந்தருக்கான அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்கள் பெற்றது. அதையடுத்து, ‘ஆன்லைன்’ வழியாக நேர்முக தேர்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்து உள்ளது. வேல்ராஜிடம் பணியாணையை கவர்னர் வழங்கினார். புதிய துணைவேந்தர் வேல்ராஜ்  3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதிய துணைவேந்தராக உள்ள வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தவர். 33 ஆண்டுகள் பேராசிரியர் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.