கோவை :
ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள் சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட ஆட்சியரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“எனது மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோக பயிற்சிக்காக சென்றனர். அம் மையத்தை நடத்தும் ஜக்கி வாசுதேவ், என் மகள்களின் மனதை மாற்றி மொட்டையடித்து சாமியாராக்கி விட்டார்
எனது மகள்களை பார்க்க எனக்கோ என் மனைவிக்கோ அனுமதி தருவதில்லை. எங்கள் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டே ஜக்கி வாசுதேவ் இப்படிச் செய்கிறார். அவரிடம் சித்திரவதை அனுபவித்து வரும் என் மகள்களை, மீட்டுத்தரவேண்டும்” என்று அந்த மனுவில் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அம்மாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து 30 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து கொடுமைபடுத்துகிறார் ஜக்கிவாசுதேவ். ஈஷாவிற்க்கு வருகின்றவர்களை கவர்வதற்க்காக எங்களது மகள்கள் விற்பனையாளர் போல் பயன்படுத்துகிறார். ஈசாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது. ஆகவே பெற்றோர்களை பார்க்கும்போது சிரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் அக்குழந்தைகள் கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இது போன்ற புகார்கள் ஜக்கிவாசுதேவ் மீது கூறப்பட்டுள்ளன. அதே போல அவரது ஈஷா மையம், அனுமதி இன்றி காட்டுப்பகுதியில் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் இருக்கிறது.
ஆனால் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் அதிகார மையத்தில் உள்ளவர்களுடன் ஜக்கி வாசுதேவ் நெருக்கமாக இருப்பதால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.