சென்னை: சென்னையில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள ரிச்சி தெரு, பாரிமுனை பகுதியில் உள்ள நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள், அதற்கான உரிமம் பெற்று ஆண்டுதோறும் தொழில்வரி கட்ட வேண்டும். ஆனால், பலர் தொழில் வரியை கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர். பல நிறுவனங்களும் தொழில்வரியை கட்டாமல் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அதை மீறியும் தொழில் வரியை நீண்ட காலமாக செலுத்தாமல் நிலுவையில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை மாநகராட்சி முன்னெடுத்தள்ளது.
அதன் அடிப்படையில் வணிக பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் சென்று சீல் வைத்தனர்.
அதுபோல பாரிமுனை நைனியப்பன் தெருவில் உள்ள 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.மாநகராட்சியின் நடவடிக்கை காரணமாக வணிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில் வரி செலுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் கடைகளை நடத்தி வந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி இல்லாமல் நடத்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.