இனி படங்கள் இயக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜூக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Must read

“இறைவி”  படத்தில் தயாரிப்பாளர்களை மோசமாக சித்தரித்ததாக கூறி இனி படங்களை இயக்க இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் இறைவி. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே நேரம் ஒரு வில்லங்கமும் வந்து சேர்ந்தது. இறைவி   படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களை அவமானப்படுத்தும்படியாக இருப்பதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்களும் படத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

இதையடுத்து இறைவி  படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி காட்சியாக திரையிட  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கேட்டுக் கொண்டார். ஆகவே கடந்த  சனிக்கிழமை ஆர்கேவி தியேட்டரில் இறைவி சிறப்புக் காட்சி, தயாரிப்பாளர்களுக்காக திரையிடப்பட்டது.
சுமார்150க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தனர். இவர்களில் ஒரு குழுவினர் படத்தில் எந்தெந்த காட்சிகள் தயாரிப்பாளர்களை அவமதிக்கும்படி உள்ளன என்று பட்டியல் போட்டார்கள்.  இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள், தங்களது சங்க அலுவலகத்தில்  கூடிப் பேசினர்.
இறுதியில், ‘கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர்களை மிகவும் அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது.  எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் இயக்கக் கூடாது. கார்த்திக் சுப்புராஜ் மன்னிப்பு கேட்டாலும் கூட இந்த தடையை விலக்கும் எண்ணமே இல்லை” என்று ஒருமனதாக தயாரிப்பாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

More articles

Latest article