டில்லி

உ பி மாநிலம் உன்னாவ் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மீது பலாத்கார புகார் அளித்த பெண் விபத்து குறித்து பிரியங்கா காந்தி கேள்விகள் எழுப்பியுள்ளார்

உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை பாஜக சட்டப்பேரவை  உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.   அதையொட்டி அவர் தந்தை தாக்கப்பட்டார்.  அதன் பிறகு தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் மரணம் அடைந்தார்.  இந்த விவகாரம் குறித்து அந்த பெண் உபி முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

அதன் பிறகு  வழக்கில் விசாரணை தொடங்கியது.  தற்போது சிபிஐ விசாரணை செய்து வரும் இந்த  வழக்கில் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வழக்கில் புகார் அளித்த பெண் தனது உறவினர் மற்றும் வழக்கறிஞருடன் காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்த  போது லாரி மோதி அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, “பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மீது புகார் அளித்த பெண்ணுக்கு விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியாக இல்லையா?   சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை என்ன?   புகார் அளிக்கப்பட்ட உறுப்பினர் ஏன் இன்னும் பாஜகவில் இருக்கிறார்?  இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் பாஜக அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என எவ்வாறு நீதி கிடைக்கும் என நம்ப முடியும்? ” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

புகார் அளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் அவருடன் காவலர் யாரும் இல்லாதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இதற்கு காவல்துறையினர் அந்தப் பெண் சென்ற வாகனத்தில் இடமில்லாததால் அவருடன் காவல்துறையினர் செல்லவில்லை என கூறுகின்றனர்.

புகார் அளித்த பெண்ணின் உறவினர், “இந்த நிகழ்வின் பின்னணியில் குற்றம்  சாட்டப்பட்ட குல்தீப் சிங் நிச்சயம் இருக்கிறார்.   அவர் சிறையில் இருந்தாலும் அவருடைய ஆட்களுக்கு மொபைல் மூலம் செய்தி அனுப்பி வருகிறார்.   அவர்கள் ஏற்கனவே எங்கள் அனைவரையும் மிரட்டி வந்துள்ளனர்.  எனவே இது விபத்து அல்ல. சதித் திட்டம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.