சென்னை: தனிப்பட்ட முறையில், தனிநபர்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், டவுன்லோடு செய்வதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும், 90ஸ் கிட்ஸ் மது, புகைக்கு அடிமையான மாதிரி 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமை ஆகிட்டாங்க என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், போதைப்பொருள் நடமாட்டம், கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் அதிகரித்ததன் விளைவாக, அதை தடுக்கும் நோக்கில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சிறப்பு படை அமைத்துள்ள கண்காணிப்பதாக கூறி வந்தாலும், பள்ளி, கல்லூரிகள், பூங்கா பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் கடந்த 2019ம் ஆண்டு,.குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்போர் பட்டியலை உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது, அதன்படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது சட்டப்படி குற்றம். செல்போன், லேப்டாப்களில் அந்த வீடியோக்களை வைத்திருப்பதும், டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். மீறி செய்தால் அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதோடு, 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் கிடையாது. ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது அல்லது அதைக் காட்டி சிறார்களை அல்லது மற்றவர்களை தொந்தரவு செய்வதுதான் சட்டப்படி குற்றமாகும். அது போன்ற செயல்களில் ஈடுபடாத இந்த மனுதாரருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும், 90-ஸ் கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆபாச படங்கள் தொடர்பாக பள்ளிகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதுடன், ஆபாச படம் பார்த்ததாக, ஒருவர் மீது பழி சொல்வதற்கு பதிலாக இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு சமூகம் முதலில் பக்குவம் அடைய வேண்டும்.
ஆபாசப் படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது குற்றம் அல்ல. ஆனால், மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம். எனவே இந்த இளைஞர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.