சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி நாளை (பிப்ரவரி 1ந்தேதி) முதல் விலையில் பால் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியால் பால் நிறுவனமான ஆரோக்யா கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. அதைத்தொடர்ந்து, மற்ற நிறுவனங்கள் பிப்ரவரி 1 முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக அறிவித்துஉள்ளது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஏற்கனவே பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி விட்டன. இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (பிப்ரவரி 1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.
இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி நிறைகொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப் பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.
தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.