சென்னை,
தமிழகத்தில் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தனியார் மருத்துவமனை செவிலி யர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மத்திய வல்லுனர் குழு பரிந்துரைத்த ஊதிய விகிதத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது ஆகும். டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால், செவிலியர்களின் போராட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களில் ஒரு பகுதியினர், அவசர மருத்துவத் தேவைகளை கவனிக்க சுழற்சி முறையில் பணிக்கு செல்லும் போதிலும் அது போதுமானதாக இல்லை.
உதாரணமாக தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 30 குழந்தைகளுக்கு 3 செவிலியர் மட்டுமே உள்ளனர். அவர்களில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும் நிலையில், அவர்களை கவனிக்க போதிய செவிலியர்கள் இல்லை. அப்பணிகளை மருத்துவர்களும், பெற்றோர்களும் கவனித்துக் கொண்டாலும் கூட, அது செவிலியரின் கவனிப்புக்கு ஈடாக இல்லை என மருத்துவமனை நிர்வாகங்கள் கூறியுள்ளன. அது உண்மையும் கூட.
மருத்துவ சேவைத் துறையில் செவிலியர்களின் பணி மகத்தானது ஆகும். நோயாளிகளை கனிவுடன் கவனித்துக் கொள்வதில் தொடங்கி, அவர்களின் சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது வரை அவர்களின் தியாகங்கள் அளவிட முடியாதவை. ஆனால், அவர்களுக்கு வழங்கப் படும் ஊதியம் என்பது மிகமிகக் குறைவு ஆகும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5000 முதல் ரூ.7000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. சென்னையில் சாதாரண மருத்துவமனைகளில் ரூ.6000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே தொடக்க நிலை ஊதியமாக வழங்கப்படுகிறது
அதேநேரத்தில் செவிலியர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமல் அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் அவர்களின் நிலை பரிதாபமானது. தனியார் மருத்துவமனை செவிலியர்களின் பரிதாப நிலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
அதன்படி ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதை உடனடியாக செயல்படுத்தும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு, இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றும்படியும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கேரளம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செவிலியருக்கு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என கடந்த ஜூலை 25ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
ஆனால், இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. செவிலியர்களுக்கு தமிழக அரசின் ஆதரவு இல்லை என்பதால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் குண்டர்களால் தாக்கப் பட்டுள்ளனர்.
சில ஆயிரம் முதலாளிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கக் கட்டண விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பல மணி நேரம் பேச்சு நடத்தி ஏராளமான சலுகைகளை வாரி வழங்கும் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், லட்சக்கணக்கான செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாதது துரதிருஷ்டவசமானது.
டெங்குக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் பரவி வரும் நிலையில், அவற்றைக் குணப்படுத்த செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானது.
எனவே, மத்திய அரசு அறிவுரைப்படி சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 20,000 ரூபாயும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.
இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்து, செவிலியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.