தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான தனிச் சிறைகள் 3, மாவட்ட சிறைகள் 4, ஆண்களுக்கான கிளைச் சிறைகள் 100 உள்பட 130-க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன. 2019 தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, தமிழகசிறைகளில் சுமார் 14 ஆயிரம் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 600 பேர் பெண் கைதிகள், 112 பேர் வெளிநாட்டுக் கைதிகள். இதேபோல, தூக்கு தண்டனைக் கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் சிறையில் உள்ளனர்.
சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்தவும், அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும்போது, சொந்தக் காலில் நிற்க ஏதுவாக கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்படுவதாகவும் தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஸ் புஜாரி கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசும் வசதியை தமிழக சிறைத் துறை அறிமுகம் செய்யதாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சிறை கைதிகள் வீடியோ காலில் அவர்களது குடும்பத்தினருடன் பேசும் வசதி ஏற்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை சிறைப் பிரிவு வெளியிட்டுள்ள அரசாணையில், ”சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல வீடியோ கால் ( காணொளி) தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தைக் குறைக்க புது முன்னெடுப்பு சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவற்றின் தவறுகளை உணர்ந்து, மேலும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் சிறைவாசிகள் தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் பேசலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் சிக்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் காண, அவர்களது குடும்பத்தினர் அவ்வப்போது சிறைகளுக்கு வருவார்கள். ஆனால், பெண் கைதிகளைக் காண, கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் வருவது இல்லை. கவுரவம், அவமானம் என இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், சிறையில் உள்ள பெண்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கு சிறைகளில் போக்க யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் புத்தகம் வாசிப்பு மற்றும் அவர்களின் திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் நேரடியாக செல்போனில் பேசும் வகையில், வீடியோ கால் வசதி செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கைதிகள் வீடியோ காலில் தங்களது உறவினர்களுடன் பேசும்போது, அதைக் கண்காணிக்க சிறை அதிகாரிகள் உடன் இருப்பார்கள். இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.