மதுரை:  ஊட்டி கோடை விழாவின் மலர் கண்காட்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று 59-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இன்று  முதல் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை கொடைக்கானல் கோடை விழா நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 2வருடங்களுக்கு பிறகு இன்று கோடை விழா தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி இன்று அங்குள்ள பிரையன்ட் பூங்காவில் தொடங்கி உள்ளது. பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில்  பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 ஆடி உயரம் கொண்ட  திருவள்ளுவர் உருவம், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, சிங்சாங், ஸ்பைடர் மேன், 20 அடி நீளம் கொண்ட டைனோசர்,மயில் உள்ளிட்ட உருவங்களை மலர்களை கொண்டு அலங்கரித்துள்ளனர்.

இன்று நடைபெற உள்ள விழாவில்  கூட்டுறவு துறை அமைச்சர், உணவு துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருகின்றனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகளின்  வருகை அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர்  பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் போக்குவரத்தை சீரமைக்க கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் காவல் துறையினர் நியமித்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைச்சாலையில் பழுதாகி நின்றால் அதனை சீர் செய்வதற்கும் மெக்கானிக்குகளையும் காவல் துறையினர் நியமித்துள்ளனர்.