சென்னை:  12 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள  “திருக்குறள்” பதிப்பு  ஜூன் மாதத்தில் வெளியிட இருப்பதாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. இதை  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் உறுதிப்படுத்தி உள்ளார்.

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில், அதை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும் என கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு திமுக அரசு பதவி எற்றதும், திருக்குறள் மணிமேகலை உள்பட பல நூல்கள் உலக மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட ஆர்வம் காட்டி வந்தது.

இந்த நிலையில்,  செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து அச்சிடும் பணி நடைபெறுகிறது என்றும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துஉள்ளார். மேலும், பல  சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.  அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் தற்போத மொழிப்பெயர்க்கப்படுகிறது. இதை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும்,  பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.