மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை, தனது கைகளாலேயே அகற்றி பிரதமர் மோடி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், மாமல்லபுரத்தில் நேற்று பிரதமரை சந்தித்தார். இருவரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த நிலையில், இன்று மீண்டும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காலையிலேயே மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி, நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை தனது கைகளாலேயே அகற்றி, தூய்மைப்பணியில் ஈடுபட்டார். தான் அகற்றிய குப்பைகளை பாலிதீன் பைகளில் அடைத்த பிரதமர் மோடி, அதை ஓட்டல் பணியாளர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம். பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.