கொச்சி: 2 நாள் பயணமாக கேரளாவில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று கொச்சி கடற்படை தளத்தில், இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். அத்துடன் கடற்படைக்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.
ரூ.23,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை திறந்து வைத்து, அந்த கப்பலை கடற்படையில் சேர்த்தார். INSVikrant இல் புதிய கடற்படைக் கொடியான ‘நிஷான்’ ஐ பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். முன்னதாக இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன், கடற்படை தலைவர் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதப்படு கிறது. இந்தக் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் விமானம் தாங்கி கப்பலாக உருவாக்கப்பட்டது. இது இந்திய கடற்படையின் சொந்த நிறுவனமான போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. விக்ராந்த், அதிநவீன தானியங்கி அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பலாகும் இது.
உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலுக்கு அதன் முன்னோடி மற்றும் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயரிடப்பட்டது. இது 1971 போரில் முக்கிய பங்கு வகித்தது. கப்பலில் அனைத்து உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நாட்டின் முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. விக்ராந்த் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியா இரண்டு செயலில் உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்டிருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்புக்கு அதிகப்படியான பலத்தை அளிக்கும்.
முன்னதாக கொச்சி கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்திய கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது, எடுத்துக்காட்டாக இருப்பது ஐஎன்எஸ் விக்ராந்த் என்று புகழாரம சூட்டினார்.
இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது : இன்று, கேரள கடற்கரையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் சூரிய உதயத்தை புதிய எதிர்காலத்தோடு பார்க்கிறார்கள். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வு, உலகச் சமூக்தினரிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அல்ல, மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்டது. தனித்துவமானது, சிறப்பானது. போர்க்கப்பல் அல்ல, கடின உழைப்பு, புத்தாலித்தனம், தாக்கம், 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவுக்கான கடமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இலக்குகள் விரைவானது, பயணங்கள் நீண்டது, கடல் மற்றும் சவால்கள் முடிவற்றவை இதற்கு இந்தியாவின் பதில் விக்ராந்த். இந்தியா தன்னிறைவு பெற்றதற்கான தனித்துவமான அடையாளம் ஐஎன்எஸ் விக்ராந்த். சுதந்திரபெற்றதற்கு பின் ஒப்பற்ற படைப்பு விக்ராந்த். உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது. இந்தியாவின் புதிய நம்பிக்கையை நிரப்பியுள்ளது, நாட்டுக்கு புதிய நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.
விகாராந்த் கப்பலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பானது, வலிமையானது, உள்நாட்டு தயாரிப்பில் உருவானது. உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு. கப்பலில் பயன்படுத்தப்பட்ட உருக்குப் பொருட்கள் உள்நாட்டைச் சேர்ந்தவை. சத்ரபதி சிவாஜி மகராஜா, தன்னுடைய படைத்திறனைப்பயன்படுத்தி கப்பற்படையை உருவாக்கி எதிரிகளை தூக்கிமின்றி செய்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கப்பல்கள் வலிமையைப் பயன்படுத்தி, மிரட்டி வர்த்தகம் செய்தனர்.
இந்தியாவின் கடல்சார் வலிமையை உடைக்க, சிதைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். ஆங்கிலேயர்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் எவ்வாறு இந்திய கப்பல்களுக்கும், வணிகர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது தெரியவரும் என்று கூறினார்.
ஐ.என்.எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலின் சிறப்பம்சங்கள்
262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்ட விக்ராந்த் போர்க்கப்பல், ஏறத்தாழ 43,000 டன் எடையை தாங்கக் கூடியது. 2,200 அறைகளை கொண்ட விக்ராந்த் கப்பலில் 1,600 அறைகள் கப்பலில் பணியாற்றுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட 31 போர் விமானங்களை விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்க முடியும்.
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களை விட 7 மடங்கு பெரியது ஐஎன்எஸ் விக்ராந்த். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மணிக்கு 51 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இதைத்தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு மங்களூருவில் சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியின் போது, காலனித்துவ காலத்திலிருந்து வேறுபட்ட, பணக்கார மற்றும் செழுமையான இந்திய கடல் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புதிய கடற்படைக் கொடியையும் பிரதமர் வெளியிடுவார்.
பிரதமர் மோடி மங்களூரு துறைமுக ஆணையத்தால் இயக்கப்படும் கொள்கலன்கள் மற்றும் பிற சரக்குகளைக் கையாளும் நோக்கத்திற்காக, கப்பல்துறை எண். 14 இயந்திரமயமாக்கலுக்கு 280 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் ஒரு திட்டத்தை துவக்கி வைப்பார்.சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் மூலம் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் மூலம் நடத்தப்படும் BS-VI மேம்படுத்தல் திட்டம் மற்றும் கடல்நீரை உப்புநீக்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
BS-VI மேம்படுத்தல் திட்டம் சுமார் ரூ. 1830 கோடி மதிப்புடையது, இது BS-VI தரத்துடன் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தூய்மையான எரிபொருளை உருவாக்கும். இதேபோல், சுமார் 680 கோடி ரூபாய் செலவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டமானது, நன்னீர் சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆண்டு முழுவதும் ஹைட்ரோகார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யும்.