மதுரை: தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி, ஜனவரி 12ந்தேதி மதுரையில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத்திருநாளான பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜனவரி 12ந்தேத நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்கிறார். அதற்காக ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை பிரதமர் மோடி வர இருக்கிறார்.
மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சில நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில், மோடி, மதுரையில் பாஜக சார்பில நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்காக, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடத்தப்படுகிறது. 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிட திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரியமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும், 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.