டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கிய காலக்கட்டமான 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தொற்றை பரவல் தடுப்பு பணியில் உயிரை பயணம் வைத்து சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மக்கள் குறிப்பட்ட நேரத்தில் கைகளை தட்டி ஒலியெழுப்ப வேண்டும் என்றும், அதுபோல மின்விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டில் அகல்விளக்கு ஏற்றி முன்களப் பணியாளர்களுக்கு நன்றியையும், ஊக்குவிப்பையும் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
இது அப்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கொரோனாவை பரவலை தடுக்கும் வகையில் இந்திய அரசும், பாரத பிரதமரும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மக்களே கைதட்டுங்கள், மணி அணியுங்கள், விளக்கேற்றுங்கள், என்று கூறி மக்களை பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதுபோன்ற விமர்சனங்களுக்கு இன்று பிரதமர் மோடி பதில் கூறி உள்ளார். இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது. இந்த சாதனை ஒவ்வொருவரும் சொந்தமானது, இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
உலக அளவில் மருத்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம் என்று கூறியவர், இன்று இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலகமே உற்று நோக்குகிறது என்றும், நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நம் மக்களை பாதுகாத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.
மேலும், கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்தபோது, பொதுமக்களிடம், விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்புவது என்று கூறியது, எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கான விளக்கம் தற்போது கிடைத்துள்ளது.
நமது மக்களின் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்புவது போன்ற அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது. அதனால்தான், இன்று இந்தியா 9 மாதங்களில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனா குறித்த அனைத்து விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது.
இருந்தாலும். நாம் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். காலணி அணிந்து கொண்டு வெளியே செல்வதைப் போல, பண்டிகை காலங்களில் முகக்கவசம் அணிவதையும் பழகிக்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மாஸ்க் போடுவதை தொடர வேண்டும் அதுதான் தீபாவளி பண்டிகையை நமக்கு சிறப்பானதாக அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.