சென்னை: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மாலை 5மணி அளவில் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில்கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், பாஜகவினர் உள்பட பலர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக செந்துள்ளார்.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவரை  ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் , ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு பிரதமர் புறப்பட்டார். அங்கு பிரதமரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு  சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். இதேபோல் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர்.

பிரதமர் வருகையால் அவரை வரவேற்க கண் கவரும் குழந்தைகளின் அழகிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியால் சென்னை சாலைகள் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.