சென்னை: பிரதமர் மற்றும் முதல்வர் கலந்துகொள்ளும் விழா நடைபெறும் நேரு ஸ்டேடியம்  திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம் எழுப்பி வருவதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கண் கவரும் குழந்தைகளின் அழகிய நடனம் நடத்தப்படுகிறது. பிரதமர் வருகையால் வண்ணமயமான சாலைகள்

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும்  இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு சென்று, பின் சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் தமிழக பாஜக சார்பில் மோடியை வரவேற்று பல்வேறு இடங்கள் பதாகைகளும், கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடியும், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,   ஆளுநர் ஆர்.என்.ரவி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.  மோடி வருகையை யொட்டி, சென்னையில் சுமார் 22,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகரம் முழுவதும் பாஜகவினர் கொடி, தோரணங்கள் கட்டி பிரமாண்டமான வரவேற்பு வைத்துள்ளனர்.  இந்த நிலையில், பிரதமர் நிகழ்ச்சி நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் அருகே திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை புகழ்ந்து வாழ்க கோஷம் எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடமும்  கோஷமிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.