பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலை அதிகரிப்பு

Must read

ஆவின் பாலின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் டீ மற்றும் காபி விலை ரூ. 2 முதல் ரூ. 5 வரை அதிகரித்துள்ளது.

மக்களின் அன்றாட வாழ்வின் தேவைகளில் ஒன்று பால். சிறு குழந்தைகளுக்கும் உணவாகவும் பால் தான் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பதும் வாடிக்கை. டீ – காபி குடிக்காதவர்களும் குறைவு. உழைக்கும் வர்கத்தினர் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை ஒரு நாளைக்கு 2 முறையாவது டீ அல்லது காபி குடித்தால் தான் அவர்களின் வேலை பழுவில் இருந்து விடுபட்டது போல எண்ணும் நிலை இன்று இருக்கிறது.

இத்தகைய சூழலில், இரு தினங்களுக்கு முன்னர் ஆவின் பாலின் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, 1 லிட்டர் பாலின் விற்பனை விலை ரூ. 6-ஆக அதிகரிக்கப்பட்டது. ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருவதால், பொதுமக்களும் அதிக அளவில் ஆவின் பால் வாங்கும் அட்டைதாரர்களாக உள்ளனர். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பாலின் விலை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில் பால் விலை உயர்வை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் டீ மற்றும் காபியின் விலை இன்று முதல் ரூ. 2 முதல் ரூ. 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் காபி ரூ. 12, டீ ரூ. 10 என்று விற்கப்பட்டு வந்த நிலையில், டீயின் விலை ரூ. 14-ஆகவும், காபியின் விலை ரூ. 16-ஆகவும் தற்போது விற்கப்பட்டு வருகிறது.

மதுரையில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பால் விலை ஏற்றத்திற்கு முன்னர், டீ ரூ. 5, காபி ரூ.7 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை ஏற்றத்திற்கு பின்னர், டீயின் விலை ரூ.9-ஆகவும், காபியின் விலை ரூ. 11-ஆகவும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் வாங்கப்படும் பார்சல் டீயின் விலை ரூ. 20ல் இருந்து ரூ.22-ஆகவும், காபியின் விலை ரூ. 22-ல் இருந்து 28-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

More articles

Latest article