தேனியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

2019ம் ஆண்டு மிகத் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அணையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, வைகை அணையில் சேமிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 45.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,592 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1,507 மில்லியன் கன அடியாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பெரியாறு 6.2 மி.மீ, தேக்கடி 5.2 மி.மீ, கூடலூர் 8 மி.மீ, சண்முகாநதி அணை 4 மி.மீ, உத்தமபாளையம் 5.4 மி.மீ, வீரபாண்டி 6 மி.மீ, வைகை அணை 66 மி.மீ, மஞ்சளாறு 31 மி.மீ, சோத்துப்பாறை 12 மி.மீ மற்றும் கொடைக்காலில் 8.6 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.