டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம், தமிழகஆசிரியர் ராமச்சந்திரன், பள்ளி மாணவர் சீருடையில் சென்று நல்லாசிரியர் விருது பெற்றார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 பேருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மத்தியஅரசு சார்பில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தலைவரால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ந்தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்த ஆசிரியர் கே.ராமச்சந்திரன் உள்பட 45 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நாளில் தேசிய நல்லாசிரியா் விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு வழங்கி கவுரவித்தார்.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் கே.ராமச்சந்திரன், எப்போதும் போல, பள்ளி மாணவர் சீருடையில் சென்று குடியரசு தலைவரிடம் விருது பெற்றார்.   முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் படத்திற்கு திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார்.